தலைவா விவகாரம்! முதல்வரை சந்திக்க விஜய்க்கு அனுமதி மறுப்பு
தலைவா பட விவகாரம் தொடர்பாக கோடநாட்டில் முதல்வரை சந்திக்க சென்ற நடிகர் விஜய் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடித்துள்ள படம் தலைவா. மதராஸபட்டினம் விஜய் இயக்கியுள்ள இப்படத்தை மிஸ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். இப்படம் நாளை(ஆகஸ்ட் 9ம் தேதி) வெளியாக உள்ளது.
இந்நிலையில் நேற்று சென்னையில் தலைவா படம் வெளியாக உள்ள 9 பெரிய தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. படத்தை திரையிடக்கூடாது, மீறி திரையிட்டால் தியேட்டரில் வெடிகுண்டு வெடிக்கும் என ஒடுக்கப்பட்ட மாணவர் சமுதாயம் சார்பில் மரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுக்க தலைவா படம் வெளியாக உள்ள தியேட்டர்களில் தலைவா படத்தின் முன்பதிவுக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் படம் நாளை வெளியாவதில் பெரிய சிக்கல் நிலவுகிறது.
இதற்கிடையே நடிகர் விஜய் மற்றும் தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோர் தலைவா படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாகவும், தியேட்டர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பது தொடர்பாகவும் கோடநாட்டில் தங்கியுள்ள முதல்வரை சந்திக்க இன்று(ஆகஸ்ட் 8ம் தேதி) காலை சுமார் 10 மணியளவில் வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து விஜய் மற்றும் சந்திரபிரகாஷ் திரும்பி வந்துவிட்டனர்.
அதேசமயம் படம் குறித்து விஜய் விடுத்துள்ள அறிக்கையில், "தலைவா படம், அரசியல் படமல்ல; துளிகூட அரசியல் கலக்காத சமூக படம். குடும்பத்தோடு அனைவரும் பார்க்கும் ஜனரஞ்சக படம். காதல், ஆக்ஷன், காமெடி என, அனைத்து அம்சங்களும் உண்டு. அரசியல் படம் என, யாரோ வதந்தியை பரப்பி விட்டுள்ளனர். இதை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். இதேபோல், படத்தின் இயக்குனர் விஜய்யும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் கருத்து தெரிவித்துள்ளனர்.